காதல் திருமணம் செய்த மாணவியை குத்திக் கொலை செய்துவிட்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெனுமூர் தூர்பள்ளி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற கல்லூரி படிக்கும் மகள் உள்ளார். இவரும் பூதலப்பட்டு சித்தமாகுல பள்ளியில் வசித்து வரும் டெல்லி பாபு என்ற பிளஸ்டூ மாணவனும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அங்குள்ள ஒரு கோவிலில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்களது பெற்றோருக்கு இவர்களது காதல் திருமணம் பற்றி தெரிய வந்துள்ளது.
மேலும் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு இருவரது பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காயத்ரிக்கு அவரது பெற்றோர்கள் வேறு மாப்பிள்ளையை பார்ப்பதை அறிந்த டெல்லி பாபு தனக்கு கிடைக்காத காயத்ரி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் விவசாய நிலத்திற்கு சென்று காயத்ரியை வழிமறித்து, அவரை கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து அங்குள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே காயத்ரி பரிதாபமாக இறந்துவிட்டார். காயத்ரியின் இறப்பால் கோபமடைந்த அவரது உறவினர்கள் டெல்லி பாபுவின் வீட்டை தீ வைத்து கொளுத்தி விட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் டெல்லி பாபுவை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் சித்தலமாகு பள்ளியில் உள்ள ஒரு மரத்தில் டெல்லி பாபு தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அறிந்து பூதலபட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காதல் திருமணம் செய்தவர்கள் இறந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.