கர்நாடக முதல்வர் குமாரசாமி மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி ஜலசக்தித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்
நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமியும் டெல்லி வந்துள்ளார்.
இந்நிலையில் டெல்லி சென்றுள்ள முதல்வர் குமாரசாமி ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி ஜலசக்தித்துறை அமைச்சரிடம் குமாரசாமி கோரிக்கை வைத்து கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார். அந்த கடிதத்தில், காவிரியின் குறுக்கே எந்த ஒரு புதிய அணையையும் அமைக்க கர்நாடக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. காவிரியின் குறுக்கே புதிய கட்டுமானம் மேற்கொள்ள அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை. அணை கட்டுவது குறித்து தமிழகத்திடம் ஒப்புதல் வாங்க வேண்டிய நிபந்தனை எந்த உத்தரவிலும் இல்லை. சட்டத்திலும் இல்லை ஆகவே மத்திய அரசும் புதிய கட்டுமானத்திற்காக அனுமதி வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.