நிதி ஆயோக் கூட்டத்தில், 2024-ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இது 5வது நிதி ஆயோக் கூட்டமாகும். இதில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், நிதி ஆயோக்கின் துணை தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்களும் அழைக்கப்பட்டனர். இதில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் உடல்நிலை காரணமாக பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிதி ஆயோக் கூட்டதில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார். அவர் பேசியதாவது, 2024-ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைய இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. 5 டிரில்லியன் டாலர் என்ற இலக்கு சவாலாக இருந்தாலும் மாநிலங்களின் முயற்சியால் அதை அடைவது சாத்தியமே. வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை அதிகரிப்பதில் ஏற்றுமதி துறை முக்கியமானது. ஏற்றுமதியை அதிகரிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.