அதிமுகவில் தான் தொண்டன் கூட முதல்வராக முடியும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசியல் களத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடக்கவிருக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அரசியல் ரீதியாக இது முக்கியமான தேர்தலாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. “அதிமுகவை புறக்கணிப்போம்” என்ற தலைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதேபோன்று “வெற்றி நடைபோடும் தமிழகம்” என்ற தலைப்பில் பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோவில் அருகே பிரச்சாரம் மேற்கொண்டு வந்த முதல்வர் பழனிச்சாமி, “அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டன் கூட முதல்வராக முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் உணவு தானிய உற்பத்தியில் தொடர்ந்து தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், தமிழக அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.