மீனவர்கள் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளை மனித நேயத்தினுடன் அணுக வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த ஜனவரி 18ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக 214 விசைப்படகுகள் கடலுக்கு சென்றுள்ளது. அதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவருக்கு சொந்தமான படகில் மேசியா, நாகராஜ், செந்தில்குமார், மற்றும் சாம்சங் டார்வின் ஆகிய 4 பேரும் மீன்பிடிக்க சென்றுள்ளனர். கடலுக்கு சென்ற படகுகள் கரைக்கு திரும்பிய நிலையில் இவர்கள் 4 பேர் சென்ற படகு மட்டும் கரை திரும்பவில்லை. இதனால் இந்திய கப்பல் படையை சேர்ந்த ஒரு கப்பல், இந்திய கடலோர காவல்படையின் ஒரு கப்பல், மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இதற்கிடையே இலங்கை கடற்படை கப்பல் படகு மீது மோதிய விபத்தில் 4 மீனவர்கள் உயிரிழந்ததாக செய்தி வெளியானது. இச்சம்பவம் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இலங்கை கடற்படை கப்பல் மோதிய விபத்தில் மூன்று இந்தியர்களும், இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கும் இந்திய தூதரகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் மீனவர்கள் சம்மந்தப்பட்ட விவகாரத்தை மனிதநேயத்துடன் அணுக வேண்டும். இந்த விவகாரத்தில் சம்பத்தப்பட்ட இரண்டு நாட்டு அரசுகளும் மேற்கொண்டுள்ள புரிதல்கள் தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளது . இது போன்ற அசம்பாவிதங்கள் இனி வரும் காலங்களில் ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கைய எடுக்கப்பட வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.