கர்ப்பப்பை, ஆண் உயிரணுக்களை வலுவாக்க அரச இலை சூரணம், குழந்தைப் பேறு தரும் அரசமரப் பழம் இப்படி எண்ணற்ற பயன்களை கொண்டது இந்த அரசமரம் பற்றி தெரிந்துகொள்வோம்.
அரச மரம் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட தொன்மையான மரம், புராணங்களிலும் இதிகாசங்களிலும் மரங்களில் உயர்வாகக் குறிப்பிடப்படுவது, அரச மரம். அரச மரத்தின் அரும்பெரும் மருத்துவ தன்மைகளால், மனிதர்க்கு நலம் புரியக்கூடியது. அரச மரங்கள் நல்ல ஆற்றல் கடத்தியாக செயல்படும் காரணங்களால், அரச மரத்தடியில் கட்டிலில் உறங்கி வந்தனர் நம் முன்னோர், அதன்மூலம் உடல் வளம், மன வளம் கிடைக்கப்பெற்று, பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்தனர்.
தமிழகத்தில் ஆற்றங்கரையோரங்களில், சாலையோரங்களில், நிழல் தரும் மரமாக அதிகம் காணப்படும் அரச மரம், சிலரால் தோட்டங்களில், மிகப்பெரிய பண்ணை வீடுகளில், காற்றுத்தூய்மைக்காக வளர்க்கப்படுகிறது. மரங்களை ஆன்மீகத்தில் இணைத்து, அதன் பெருமைகளை அதன் மூலம் பரப்பி வந்தனர், நம் முன்னோர்கள், இதன் விளைவாகவே, நாவல் மரம், அத்திமரம், வேப்பமரம், ஆல மரம் அரச மரம் உள்ளிட்ட மரங்களில் எல்லாம் கடவுள் வாசம் செய்வதாகக்கூறி, அந்த மரங்களை மக்கள் தங்கள் தேவைக்கு அழிக்காமல் அவற்றை எங்கும் வளர்த்து, அந்த மரங்களை காப்பாற்றி, அந்த மரங்களின் நல்ல ஆற்றல் மூலம், மனித இனம் தழைக்க, பேருதவி செய்தனர்.
அவ்வாறு அவர்கள், அந்த மரங்களை வேறு சாதாரண மரங்களைப்போல கூறியிருப்பார்களேயானால், இன்று நாம் காண்பதற்கு அரிதாகிப்போன, மனிதர்க்கு நலம் பல செய்யும், வாத நாராயணன் மரம், மருத மரம், நுணா மரம் உள்ளிட்ட பல மரங்கள் அரிதானதைப்போல, இந்த மரங்களும் அரிதாகி, அழிந்திருக்கக் கூடும்.
முன்னோர்கள் ஆன்மீகத்தில் இணைத்துக் கூறிய மரங்கள் யாவும், மனிதர்க்கு தீங்கு இளைக்கும் கார்பன் மோனாக்சைடு வாயுவை அதிகம் சுவாசித்து, மனிதர்க்கு சுவாசத்திற்கு, உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு உறுதுணை புரியும் ஆக்சிஜனை அதிக அளவில் வெளியுடுகின்றன. இந்த நல்ல வாயுக்கள் காற்றில் அதிகம் கலந்து, காற்று மாசுபாட்டை, குறைத்து, மனிதர் சுவாசிக்க ஏற்ற காற்றை, தாம் வளரும் இடங்களில், பரப்பி வருகின்றன.
அரச மரத்தினை தினமும் காலை வேளைகளில் சுற்றிவரும் குழந்தைப்பேறில்லாத பெண்கள் விரைவில் மகப்பேறடைவர், அரச மரத்தில் உள்ள நுண்ணிய ஆற்றல் அலைகள், மனிதர்களின் எண்ணங்களை தூய்மை செய்வது மட்டுமல்ல, பெண்களின் கருப்பை பாதிப்புகளையும் சரிசெய்து, அவர்களின் கருவுறும் தன்மையை இயல்பாக்குகின்றன. அரச மரத்தின் இலைகள், பழங்கள், பட்டைகள், வேர்கள் அனைத்தும் மருத்துவ நன்மைகள் மிக்கவை.