போலீஸ் ஏட்டை இரும்பு கம்பியால் தாக்கி தப்பிச் சென்றவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள பாலக்கரை காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் வேல்முருகன். இவர் சங்கிலியாண்டபுரம் பைபாஸ் சாலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது அதே சாலையில் சங்கிலியாண்டபுரத்தை சார்ந்த விஜய் மற்றும் 2 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் விரைந்து வந்து கொண்டிருந்தனர். விஜய் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை பிடிக்க வேல்முருகன் முயன்றுள்ளார்.
இந்நிலையில் விஜய் மற்றும் உடன் இருந்தவர்கள் வேல்முருகனின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த வேல்முருகன் மயங்கி கீழே விழுந்துள்ளார்.இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் வேல்முருகனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனையடுத்து தப்பிச் சென்ற மூவரையும் பாலக்கரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.