இன்று மக்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் புதிய மக்களவையின் முதல் கூட்டம் நடைபெறுகின்றது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த 31_ஆம் தேதி கூடிய மத்திய மந்திரிசபையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ஆம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று முதல் முறையாக 17-வது நாடாளுமன்ற மக்களவை கூடுகிறது. இன்றும், நாளையும் கூடும் இந்த கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பாரதீய ஜனதா கட்சி மூத்த எம்.பி. வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைக்கின்றார்.இன்று நாடாளுமன்றம் கூடுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சியினர் கூட்டத்தை கூட்டி சபையை சுமுகமாக நடத்துவது குறித்த முக்கிய ஆலோசனையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.