குழந்தைகள் தாத்தா- பாட்டியின் பாதுகாப்பில் வளர்வதால் என்னென்ன பயன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
தற்போதைய காலகட்டத்தில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் சென்றால் தான் நல்லதொரு வாழ்க்கையை வாழ முடியும். இந்நிலையில் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை வீட்டில் இருக்கும் தாத்தா,பாட்டி பொறுப்போடு கவனித்துக் கொள்வார்கள். எனவே குழந்தைகள் சரியான நேரத்துக்கு சாப்பிட்டார்களா? தூங்கினார்களா? என்று வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. சிலர் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக வேலைக்கு ஆட்களை அமர்த்துவார்கள். அவர்களைவிட அன்புடனும், அக்கறையுடனும் தாத்தா, பாட்டி குழந்தைகளை கவனித்துக் கொள்வார்கள்.
இதனால் குழந்தைகளுக்கு பெற்றோரை பிரிந்து இருக்கும் ஒரு அந்நியமான உணர்வு இருக்காது. வீட்டில் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்ந்து கொள்வார்கள். மேலும் தாத்தா பாட்டியிடம் வளர்ந்த குழந்தைகள் குடும்பத்தின் பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்வார்கள். பாசம் மரியாதை, ஒழுக்கம், சுய கட்டுப்பாடு போன்ற குணங்களை அந்த குழந்தைகள் தெரிந்து கொள்வார்கள். மற்ற குழந்தைகளைவிட புத்திசாலித்தனமாகவும், முதிர்ச்சியுடனும் இருப்பார்கள். பொதுவாக வயதானவர்களுக்கு ஞாபக மறதி, மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும்..
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் முதியவர்கள் தனிமையில் இருக்கும் போது தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அவர்கள் தங்களுடைய பேரக்குழந்தைகளுடன் இருக்கும்போது இந்த பிரச்சினை ஏற்படாது. அரிதாகவே தான் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. இதனைப் பெற்றோர்கள் புரிந்து கொண்டு தங்களுடைய குழந்தைகளை தாத்தா பாட்டியுடன் விளையாடவும், நேரத்தை செலவிடவும் வேண்டும். எனவே கூட்டுக்குடும்பமாக வாழும்போது நிறைய மகிழ்ச்சியும், பயன்களும், உங்களுடைய குழந்தைகளுக்கு பாதுகாப்பும் கிடைக்கிறது.