மினி வேன் மோதிய விபத்தில் “செண்பகத்தோப்பு டான்” என்றழைக்கப்படும் காளை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செண்பகத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருக்கு சொந்தமான காளை கடந்த 2019 ஆம் ஆண்டு பென்னாத்தூரில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றது. மேலும் 2020 இல் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் முதல் பரிசை பெற்றது. இதுவரை இந்த காளையால் 30 பேர் எருது விடும் விழாவில் படுகாயமடைந்துள்ளனர். இதனால் இந்த காளைக்கு “செண்பகத்தோப்பு டான்” என்ற பெயர் வந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற எருது விடும் விழாவில் கலந்துகொள்ள காளை அணைக்கட்டு சாலை வழியாக போட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற மினி வேன் காளையின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த காளையின் இடது பக்கத்தில் 2 விலா எலும்புகள் உடைந்தது . மேலும் வயிற்று பகுதி கிழிந்து குடலும் இரைப்பையும் வெளியே வந்ததால் அதிக அளவு ரத்தப் போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து வேலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் காளைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்களின் 7 மணி நேர தீவிர சிகிச்சைக்கு பிறகு விலா எலும்பில் பிளேட் வைத்தனர்.பின்னர் வெளியே வந்த குடலையும் இரைப்பையையும் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றுக்குள் பொருத்தினர். சிகிச்சைக்கு பிறகு காளை நன்றாகவே இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென்று காளை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதனால் காளையின் உரிமையாளரும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் உயிரிழந்த காளையை கண்டு கதறி அழுதனர். பின்னர் முறையான சடங்குகள் செய்யப்பட்டு “செண்பத்தோப்பு டான்” ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.