ஒடிசா மாநிலத்தில் அமேசான் அதிரடி சலுகையில் லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
அமேசானில் ரூ.190-க்கு லேப்டாப் என்ற மோசடியால் பாதிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், ஒரிசா மாநில நுகர்வோர் நிவாரண ஆணையம் ரூ. 45,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஒரிசாவை சேர்ந்தவர் சுப்ரியா ரஞ்சன். சட்டக்கல்லூரி மாணவரான இவர், கடந்த 2014-ம் ஆண்டில் பிரபல இகாமர்ஸ் தளமான அமேசானில் ரூ.190-க்கு அறிவிக்கப்பட்ட லேப்டாப்பை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஆர்டர் உறுதிப்படுத்தப்பட்ட சில நிமிடங்களில் அதனை அமோசன் ரத்து செய்துவிட்டதாக அவருக்கு இமெயில் வந்திருக்கிறது.
இதை பார்த்த அதிர்ந்துபோன அவர் கஸ்டமர் சர்வீஸ்க்கு போன் செய்து விசாரித்து உள்ளார். பல முறை உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் தொழில்நுட்ப ரீதியில் கோளாறு காரணமாக விலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன் காரணமாகவே லேப்டாப் ஆர்டர் ரத்து செய்யப்பட்டதாக விளக்கம் பெறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சட்டக்கல்லூரி மாணவர் சுப்ரியா மற்றொரு லேப்டாபை ஆர்டர் செய்துள்ளார். அதுவும் உரிய நேரத்தில் அவரிடம் கிடைக்காத காரணத்தால் கல்லூரி பாடத்திட்டத்தை சமர்பிக்க தாமதமாகி உள்ளது.
ஆனால் இந்த சம்பவத்தை மாணவர் விடாமல் ஒரிசா மாநில நுகர்வோர் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார். சட்டக்கல்லூரி மாணவரின் நீண்ட நாள் போராட்டத்திற்கு பலன் தற்போது கிடைத்துள்ளது. நிதி மோசடி மற்றும் உளவியல் துன்புறத்தலுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென அமோசன் நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இழப்பீட்டு தொகையாக ரூ.40,000 மற்றும் கூடுதலாக வழக்கு செலவு மற்றும் வாடிக்கையாளரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக 5000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.