சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. கடந்த புதன்கிழமை மாலை மூச்சுத் திணறல் அதிகமானதால் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இந்நிலையில் பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக சாதனங்கள் இயங்காததால் சசிகலா நேற்று முன்தினம் விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தனர்.
அதில் அவரது நுரையீரலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதை தொடர்ந்து சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் தற்போது சசிகலாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் சசிகலாவுக்கு தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை தொடரவே சசிகலா விரும்புகிறார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் ஆக்ஸிஜன் சப்ளை அளவு குறைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.