டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் விவசாயிகளை கொல்வதற்காக அனுப்பப்பட்ட மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசாங்கம் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் எந்தவித முடிவும் தற்போது வரை தீர்மானிக்கப்படவில்லை. இதனிடையே குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வன்முறையை ஏற்படுத்தும் நோக்கில் 4 விவசாயிகளை கொல்வதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த நபரை பிடித்து காவல்துறையினரிடம் விவசாயிகள் ஒப்படைத்துவிட்டனர். இந்நிலையில் அந்த நபர் விசாரணையில் குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள ட்ராக்டர் பேரணியில் துப்பாக்கி சூடு நடத்துவதற்காக தன்னை அனுப்பியுள்ளதாக ஒப்புக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அந்த நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளின் தலைவரான குல்வந்த் சிங் சந்து எங்களது போராட்டங்களை முடக்குவதற்காகத்தான் சதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று புகார் அளித்துள்ளார்.