அரசு மருத்துவமனை நர்ஸின் வீட்டு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முத்தம்பாளையம் வாஞ்சிநாதன் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் தொகைபாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அவரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், உள்ளே சென்று பீரோவில் இருந்த மொத்த பணத்தையும் திருடிவிட்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதே பகுதியில் வசித்து வரும் புவனேஸ்வரியின் மகனான சிவகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் அவர் விரைந்து வந்து வீட்டில் பார்த்தபோது ரூபாய் ஒரு லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த விழுப்புரம் தாலுகா போலீசார் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.