விவசாயி ஒருவர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளைக்கு அருகிலிருக்கும் மோகனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (58). விவசாயியான இவர் தன் நிலத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்களை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கன மழையினால் சுமார் 88 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதில் ரமேஷ் பயிரிட்டிருந்த நெற்பயிர்களும் சேதமடைந்தது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த ரமேஷ் பாபு இன்று அதிகாலையிலேயே வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனைத்தொடர்ந்து நீண்ட நேரமாகியும் அவரை காணாததால் அவரின் மகன்கள் ஊர் முழுவதும் அவரை தேடியுள்ளனர்.
இதற்கிடையில் ரமேஷ் திருச்சியில் இருந்து காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் அதிவிரைவு இரயின் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, ரமேஷ் தான் பயிரிட்ட நெற்பயிர்கள் சேதமானதோடு கூட்டுறவு வங்கியிலும் கடன் வாங்கியுள்ளார். அதனை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளதால் தற்கொலை செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.