தமிழக மீனவர்களை கேரள மீனவர்கள் கடுமையாக தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தாக்கி வந்த நிலையில் தற்போது அண்டை மாநிலமான கேரளா மீனவர்களும் தமிழக மீனவர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தூத்தூர் பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் அப்பகுதியை சேர்ந்த பென்சிகர் என்பவருக்கு சொந்தமான மேரி மாதா என்ற விசைப்படகில், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தொப்பும்படி மீன்பிடித் துறைமுக கடல் பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் அனைவரும் நேற்று வழக்கம்போல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு வந்தனர்.
அப்போது திடீரென அங்கு வந்த 20 கேரள மீனவர்கள் தூத்தூர் மீனவர்களை தாக்க தொடங்கினர். இதில் சுர்ளிங் என்ற மீனவர்களை கேரள மீனவர்கள் கடுமையாகத் தாக்கினர்.இதனை தடுக்க முயற்சித்த சுர்ளிங்கின் மகன் சஜின்னையும் கடுமையாக தாக்கினர். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த தந்தை,மகன் இருவரும் கொல்லம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து கேரள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கேரள மீனவர்கள் தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.