கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரிடம் லண்டனில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு தம்பதி 9 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலித்துக்கொண்டு, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
பண்ருட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (58). அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ் (50), மாளிகைமேடு குமார்(40) ஆகியோர் நண்பர்கள். இதில் கிருஷ்ணமூர்த்திக்கு 2015-ல் கடலுார் கோண்டூரைச் சேர்ந்த அன்வர் பாட்ஷாவுடன் அறிமுகம் கிடைத்தது. இவர், தனக்கு தெரிந்தவர்கள் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறியிருக்கிறார்.
அதன்பேரில் கிருஷ்ணமூர்த்தியும், நண்பர்களும் வெளிநாட்டு வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதிக்கலாம் என்று கனவு கண்டுள்ளனர். அன்வர் பாட்ஷா அறிமுகம் செய்த முனிராபேகம், லண்டனில் உள்ள தனது கணவர் முகமது அஜ்மல்கான் ஆகியோருடன் பேசியிருக்கிறார்கள்.
அவர்கள் விசா, கன்சல்டன்சி நிறுவனத்து கட்டணம் என்கிற பெயரில் பல தவணைகளாக 9 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர். ஆனால், வேலை வாங்கித் தரவில்லை. நாட்கள் மாதங்களாகி ஆண்டு கணக்காகி விட்டது. வேலை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை பணத்தை திருப்பிக் கொடுங்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த தம்பதி மற்றும் அன்வர் பாட்ஷா ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், முனிராபேகம், முகமது அஜ்மல்கான், அன்வர் பாட்ஷா ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர்.
இதில் முனிரா பேகம் ஏற்கனவே மற்றொரு பண மோசடி வழக்கில் கைதாகி கடலுார் பெண்கள் கிளைச் சிறையில் இருக்கிறார். மேலும், அன்வர் பாட்ஷாவை கைது செய்தனர். முகமது அஜ்மல்கான் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடிவருகின்றனர்.