ஸ்டாலின் வேலை வாங்குவது மட்டுமல்லாமல் தீயை கூட மிதிப்பார் என்று கடம்பூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், அரசிய கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி, மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருத்தணியில் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஸ்டாலினுக்கு வேல் வழங்கப்பட்டு உள்ளது. அதிமுகவினர் அதனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜு, “பசும்பொன் முத்துராமலிங்கர் நினைவிடத்தில் திருநீறை வாங்கிக்கொண்டு அதை கீழே கொட்டிய ஸ்டாலின் முதல்வராக வர முடியாது. விபூதி மற்றும் குங்குமத்தை அழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஸ்டாலினை கடவுளும், மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஸ்டாலின் வேலை வாங்குவது மட்டுமல்லாமல் தீயை மிதிக்கவும், அலகு குத்தவும் கூட செய்வார்” என்று விமர்சனம் செய்துள்ளார்.