Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

களைகட்டிய கலாச்சார விழா… கோலாகலமான தொடக்கம்…. அசத்திய கலைஞர்கள்….!!

உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாமல்லபுரத்தில் கலாச்சார கலை விழாவானது தொடங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கலாச்சார கலை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கலாச்சார கலை விழா மாமல்லபுரம் பூங்காவில் உள்ள திறந்தவெளி மேடையில் தொடங்கிவிட்டது. இந்த விழாவிற்கு மாமல்லபுரம் சுற்றுலா அதிகாரி ராஜாராமன் தலைமை வகித்தார். அதோடு இந்த விழாவானது மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலை கல்லூரி முதல்வர் ஜெ.ராஜேந்திரன் முன்னிலையில், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ செல்வம் இந்த விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்துள்ளார்.

இந்த விழாவின் முதல் நாளில் மீனாட்சி ராகவன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் குழுவினரின் தப்பாட்டம் மற்றும் கிராமிய நடன நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று நடனம் ஆடிய நடன குழுவினருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் மாமல்லபுரம் வருவாய் அலுவலர் ஜேம்ஸ், மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டிகள் சங்க மூத்த தலைவர் எம்.கே.சீனிவாசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் போன்ற பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த கலாச்சார கலை விழாவானது வருகின்ற பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

Categories

Tech |