ரஷ்யாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்களையும், போராட்டக்காரர்களையும் காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து அமெரிக்கா உட்பட பல நாடுகளும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினையும், அவர் வழிநடத்திய அரசின் ஊழலையும் குறித்து பல விமர்சனங்களை கூறி வந்தவர் நாவல்னி. இந்நிலையில் விஷம் வைக்கப்பட்ட உணவை உண்ட நாவல்னி சிகிச்சைக்காக ஜெர்மனி சென்ற நிலையில் மீண்டும் ரஷ்யாவுக்கு திரும்பினார். தற்போது பழைய வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்றிருந்த நாவல்னியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
இதனால் அவரை விடுவிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் ரஷ்யாவின் தலைநகர் உள்பட பல இடங்களில் போராட்டக்காரர்களும் ,பத்திரிகையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில் போராட்டக்களத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு வருகிறது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் நடைபெற்ற போராட்டத்தில் சில காவல் துறையினர் காயமடைந்துள்ளனர். இதனால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ்,” கைது செய்யப்பட்டுள்ள நாவல்னியை விடுவிக்க வேண்டும். அவருக்கு ஆதரவாக தங்களது சர்வதேச உரிமைகளை பயன்படுத்திய போராட்டகாரர்களையும், பத்திரிகையாளர்களையும் விடுவிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.