தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் வழக்கமா தேர்தல் அறிக்கையை வழங்குவோம். தொலைநோக்கு திட்டங்களை அறிவிப்போம். அதுதான் திமுக தொடர்ந்து செஞ்சுகிட்டு இருக்க கூடிய வழக்கம். ஆனால் அதைவிட முக்கியமான ஒரு விஷயம் தமிழ்நாட்டு மக்களுக்கு அவசியம் தேவைப்படுது. அதை ஊடகங்கள் மூலமாக நான் அறிவிக்கிறேன்.
மு க ஸ்டாலின் ஆகிய நான் தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதி அளிக்கிறேன். உங்கள் பிரச்சனையை தீர்ப்பதே என்னுடைய முதல் பணி. எனது அரசினுடைய முதல் 100 நாட்கள் போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு. இதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கக்கூடிய உறுதிமொழி.
மக்களின் கோரிக்கை மனுக்களை பெறுவதற்கான மக்களை நோக்கிய என்னுடைய பயணம் வருகிற 29-ஆம் தேதி முதல் தொடங்கப்படுகின்றது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என இந்த பயணத்திற்கு பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது. நான் திருவண்ணாமலையில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகின்றேன். அடுத்த முப்பது நாட்களில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் உள்ளடக்கிய மக்களுடன் நடைபெறும் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றேன்.
நான் கலந்து கொள்ளக்கூடிய கூட்டங்களில் அந்த தொகுதியைச் சார்ந்த கிராமம் அல்லது வார்டில் இருக்கும் மக்கள் ஒவ்வொருவருடைய குறைகளையும் கேட்டறியும் படி, குறிப்பிட்ட தனித்தனி பதிவு எண் கொண்ட ஒரு படிவம் கொடுக்கப் போகின்றோம். ஒவ்வொரு உடைய குறைகள் அடங்கிய முழு தகவல்களையும் கொடுக்கப் போகின்றோம். அதை பெற்றுக்கொண்டு திமுக ஆட்சி அமைந்ததும் முதல் 100 நாட்களில் இவை அனைத்தும் சரி செய்யப்படும் என உறுதியளிக்கின்றேன் என முக.ஸ்டாலின் தெரிவித்தார்.