சென்னையில் மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் ஆசை வார்த்தை கூறி மோதிரங்களை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் சாலை துவாரகா நகரின் மூன்றாவது தெருவில் வசிக்கும் 65 வயதுடைய மூதாட்டி ரவணம்மா. இவருக்கு பிரசாத் என்ற மகன் இருக்கிறார். இவர் பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் சென்னை மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகில் ரவணம்மா சென்று கொண்டிருக்கையில் அவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேசியுள்ளார். அந்த நபர் அருகில் நிகழ்ச்சி ஒன்று நடப்பதாக கூறியுள்ளார்.
மேலும் அங்கிருக்கும் குழந்தைகளுக்கு பெரியவர்கள் ஆசிர்வாதம் வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ரவணம்மா குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் அளிப்பது நன்மை தான் என்று எண்ணிஅந்த நபருடன் சென்றுள்ளார். அந்த நபர் ரவனம்மாவை அழைத்து சென்று அங்குள்ள படியில் அமரவைத்துவிட்டு குழந்தைகளின் பெற்றோர்கள் வசதிபடைத்தவர்கள் என்றும் அவர்கள் உங்களுக்கு தங்க மோதிரங்களை வழங்குவார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ரவணம்மாவின் கையிலிருந்த 3 மோதிரங்களை வாங்கிய அந்த நபர் அளவு கொடுக்க வேண்டும் என்று கூறி எடுத்து சென்றுள்ளார். இதற்கிடையில் நீண்ட நேரமாக படியில் அமர்ந்து இருந்த மூதாட்டியை அங்கிருந்த காவலாளி ஒருவர் கவனித்துள்ளார். அவரிடம் விசாரித்த போது தான் அந்த மர்ம நபர் மூதாட்டியை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மைலாப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி அந்த நபர் இதேபோல் பல மூதாட்டிகளிடம் மோசடி செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதனால் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.