கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் வழங்க கோரி தரையில் புரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
எந்த வருடத்திலும் இல்லாதது போல இந்த வருடம் ஜனவரி மாதத்தில் பொங்கலையொட்டி நல்ல மழை பெய்தது. இதனால் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக வெங்காய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நரசிங்கபுரம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க கோரி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்துள்ளர் .
அப்போது மாவட்ட ஆட்சியர் அங்கு இல்லாததால் விவசாயிகள் கொண்டு வந்த அழுகிய செடிகளை கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் கொட்டி அதில் படுத்து கோஷங்களை எழுப்பி உள்ளனர். பின்னர் காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், சின்ன வெங்காயம் சாகுபடி செய்தவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.