டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் டிராக்டர் பேரணியில் போலீஸ் கண்ணீர் புகை குண்டு வீசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி – ஹரியானா எல்லைப்பகுதியான கர்னல் மற்றும் டெல்லி – உத்தரப்பிரதேசம் எல்லைப்பகுதியான காசிப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து எல்லைகளைத் தாண்டி, தடுப்புகளை தாண்டி தற்போது விவசாயிகள் போராட்டமானது டெல்லிக்குள் நுழைந்திருக்கிறது. இந்த போராட்டமானது மிகவும் கடுமையான கட்டத்தை எட்டி இருக்கிறது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளை கலைக்க டெல்லி காவல்துறை அதிகாரிகள் முற்பட்டாலும், அதனை மீறி தற்போது போராட்டக்காரர்கள் டெல்லிக்கு நுழைந்திருக்கிறார்கள்.
மிக முக்கியமாக கர்னல் நெடுஞ்சாலையில் இருக்கும் பகுதியில் தடுப்புகளை அகற்றிவிட்டு டெல்லிக்கு நுழைவதற்கான முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக கண்ணீர் புகை குண்டுகளையும், தண்ணீர் பீச்சி அடிப்பதற்கான முயற்சிகளையும் டெல்லி காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
டெல்லி உத்தரபிரதேச எல்லைப்பகுதியான காசிப்பூர் பகுதியிலிருந்து தடுப்புகளை தாண்டி தற்போது எல்லைக்கு உள்ளே உள்ள பாண்டவ் நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பெரிய பெரிய கண்டைனர் லாரிகளை வைத்து தற்போது டெல்லி காவல்துறை அதிகாரிகள் சாலைகளை மறித்து இருந்தாலும், அருகே உள்ள துணை சாலைகள் வழியாக அவர்கள் டெல்லிக்கு உள்ளே நுழைவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டத்தால் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விகுறையாகி விடக்கூடாது என்ற வகையிலும் விவசாயிகளை அமைதியாக கலைந்து செல்லுங்கள் என்ற ஒரு கோரிக்கையை டெல்லி காவல்துறையினர் முன்வைத்து வருகிறார்கள். ஆனால் விவசாயிகள் பேரணி முழுமையடையாமல் திரும்பி செல்ல மாட்டோம் என்ற கருத்தை சொல்லி வருகின்றார்கள்.