முன்னால் சென்ற காரின் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியின் டிரைவர் பிரேக் பிடித்தால் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வழியாக ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலத்திற்கு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை காக்கிநாடா பகுதியில் வசித்து வரும் நாக சந்பாபு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் அதே பகுதியில் வசித்து வரும் வெங்கட்ரமணன் என்பவரும் லாரியில் இருந்துள்ளார். இந்த லாரியானது திண்டிவனம் அருகில் உள்ள நத்தமேடு சந்திப்பில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வரும் கார் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பிரேக் பிடித்து விட்டார்.
அப்போது அவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரியானது எதிரே சென்ற காரின் பக்கவாட்டில் மோதிவிட்டு சாலையில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. ஆனால் நாகசந்பாபு படுகாயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் சென்னை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.