அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் தனது கணவர் வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் ஒரு ஸ்வீட் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு விக்னேஷ் மற்றும் விஷ்வா என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். கவிதாவிற்கு இரைப்பை வலி ஏற்பட்டதால் கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தனது சகோதரன் வீட்டிற்கு சென்று அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின் கவிதாவை அவளது கணவன் அடிக்கடி அங்கு சென்று பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் புதுக்குடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டு, அதன் பின் ஆறுமுகநேரியில் உள்ள தன் கணவர் வீட்டிற்கு கவிதா வந்துள்ளார்.
ஆனால் அந்த சமயம் செந்தில் குமாரின் தந்தை சோமசுந்தரத்திற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் மனைவி வீட்டிற்கு வந்த செய்தியை அறிந்து செந்தில்குமார் கோயம்புத்தூரில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அதிகாலை 12:3௦ மணி அளவில் தனது வீட்டு கதவை தட்டியபோது, அவரது மகன் விஷ்வா அழுது கொண்டே கதவை திறந்துள்ளார். இதனையடுத்து செந்தில்குமார் உள்ளே சென்று பார்த்தபோது தனது வீட்டில் உள்ள பூஜை அறையில் கவிதா துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் அவரை உடனடியாக மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனையில் அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் கவிதாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.