பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் புதுமாப்பிள்ளை உடல் கருகி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேலாயுதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு பெட்ரோல் பங்க் இயங்கிவருகிறது. அங்கு தரையில் பதிக்கப்பட்டிருந்த டேங்கருக்குள் இருந்த பெட்ரோலை மாற்றி வாகனத்தில் உறிஞ்சும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த பணியில் தென்காசி மாவட்டம் பாப்பான் குளத்தில் வசித்துவரும் ரகு, தியாகராஜன், பாலசுப்பிரமணியன் மற்றும் இலுப்பையூரணி பகுதியில் வசித்து வரும் ஜஸ்டின் போன்றோர் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டிருந்த டேங்கருக்குள் தண்ணீரை நிரப்பி விட்டு அதனை சுத்தம் செய்த பின் தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றி விட்டனர். அப்போது அந்த டேங்கருக்குள் இருந்து பெட்ரோல் வாசனை அதிகமாக வந்ததால் அதற்குள் மின்விசிறி வைத்து அதனை இயக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு டேங்கர் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இந்த விபத்தில் டேங்கரின் நுழைவு வாயிலில் ஏணியில் நின்று கொண்டிருந்த ரகு மீது தீப்பிடித்து எரிந்து விட்டது. இதனால் சுமார் 20 அடி உயரத்திற்கு ஏணியுடன் ரகு தூக்கி வீசப்பட்டுள்ளார். அதோடு அங்கு நின்று கொண்டிருந்த ஜஸ்டின் உடல் கருகி படுகாயம் அடைந்து விட்டார். இதனைபார்த்த அருகில் இருந்தவர்கள் ரகு மற்றும் ஜஸ்டின் ஆகிய இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ரகுவுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரகு பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் ஜஸ்டினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் கனி என்பவருடன் ரகுவிற்கு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.