டெல்லியில் டிராக்டர் பேரணி மேற்கொண்ட விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர்
டெல்லியின் பல்வேறு எல்லைகளை முற்றுகையிட்டு இருந்த விவசாய சங்கம் இன்று தான் மேற்கொண்ட டிராக்டர் பேரணியில் அனுமதிக்கப்பட்ட சாலைகளை விட்டு விலகி டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கும் நுழைந்துள்ளனர். அதில் ஒரு பகுதியாக செங்கோட்டையை நோக்கி விவசாய சங்கம் டிராக்டர்கள் மூலம் பயணிக்க முயற்சித்த போது போலீசார் அவர்களை தடுக்க முயற்சி செய்தனர். ஆனாலும் அவர்கள் காவல்துறையினரை தாக்கிவிட்டு டெல்லி செங்கோட்டையை நோக்கி முன்னேறி தற்போது செங்கோட்டையை முற்றுகையிட்டனர்.
இன்று குடியரசு தின அணிவகுப்பு முடியும் இடமாக செங்கோட்டை இருக்கிறது. அங்குதான் அணிவகுப்பு சார்ந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும். ஆனால் இன்று முக்கிய பாதுகாப்பு மிக்க இடமாக கருதப்படும் செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் வன்முறையை ஏற்படுத்திய விவசாய சங்கத்தினர் சாலை தடுப்புகளை உடைத்து காவல்துறையினரை தாக்கியுள்ளனர். மேலும் டிராக்டர்கள் மூலம் காவல்துறையினர் மீது மோதி விபத்து ஏற்படுத்த முயற்சித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
காவல்துறையினரும் விவசாய சங்கத்தினரும் சேர்ந்து ஆலோசித்து குறிப்பிட்ட சாலையில்தான் பேரணியை நடத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டிருந்தது ஆனால் அதனை மீறி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் டிராக்டர்களை அச்சுறுத்தும் வகையில் ஓட்டி பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த விவசாயிகள் தற்போது செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர்