கொரோனா காரணமாக இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்க முடியவில்லை என்று இங்கிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு இந்திய மக்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசு தின வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். இதையடுத்து தன்னால் இந்தியாவின் குடியரசு தின விழாவில் பங்கு பெற முடியாமல் போனது பற்றி வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “இந்தியா மிகப்பெரிய இறையாண்மை கொண்ட நாடு. என்னுடைய நண்பர் இந்தியாவின் பிரதமர் மோடியின் அழைப்பில் குடியரசு தின விழாவில் பங்கேற்க இருப்பதை நினைத்து ஆவலாக இருந்தேன்.
ஆனால் கொரோனா காரணமாக என்னால் பங்கேற்க முடியவில்லை. கொரோனாவில் இருந்து மனிதர்களை விடுவிக்கும் தடுப்பூசிகளை உற்பத்தியில் எங்கள் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. இந்தியா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகள் ஒன்றிணைந்து முயற்சித்து கொரோனாவுக்கு எதிரான வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். மேலும் இந்த வருடத்தின் பிற்பகுதியில் இந்தியாவிற்கு வருகை தருவதாக” கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மற்றும் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான குடியரசு தினமாக இருக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.