பிரிட்டனில் பிரக்சிட் விதிகளால் வர்த்தகர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது.
பிரக்சிட் விதிகளால் வர்த்தகர்களின் அன்றாட வாழ்வில் பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனுக்கு வரவேண்டிய காய்கறிகள் ,பழங்கள் மற்றும் பிரெஞ்சு ஒயின் போன்ற உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பிரிட்டன் வணிகர்கள் கூறியுள்ளனர்.மேலும் பிரிட்டனில் இருந்து பிரான்சிற்கு அனுப்பப்படும் இறைச்சிகள் சரியான நேரத்திற்கு வந்து சேராததால் பிரிட்டனில் இறைச்சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து அனுப்பப்படும் இறைச்சி சரியான நேரத்திற்கு பிரான்ஸை சென்றடையாததால் பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள இறைச்சி பல இடங்களில் சிக்கி அழுகும் நிலை உருவாகியுள்ளது.
இதேபோல் வட அயர்லாந்திலும் பல இடங்களில் உணவுப்பொருட்களின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. ஆனால் உணவு பற்றாக்குறைக்கு காரணம் பிரெக்சிட் விதிகள் அல்ல என்று அயர்லாந்து அமைச்சர்கள் கூறிவருகின்றனர். இதுமட்டுமல்லாமல் பிரிட்டனிலிருந்து உடைகள், காலணிகள் போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்பவர்களுக்கு ஒரு விதமான சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் கட்டணம் விதிக்கப்படுவதால் அப்படி கட்டணத்தை செலுத்தி பொருட்களை வாங்க வேண்டுமா என்று மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மற்றொரு பிரச்சனை என்னவென்றால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள மக்கள் பிரிட்டனிலிருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கும் போது அவற்றை வேண்டாம் எனத் திருப்பிக் கொடுத்து விட்டால் மீண்டும் அந்த பொருட்களை பிரிட்டனுக்கு கொண்டு வரும் செலவை கணக்கிடும் பொழுது அவற்றை அங்கு கொண்டு வருவதற்கு பதிலாக ஐரோப்பியாவில் வைத்து எரித்து விடுவதே மேல் என்ற நிலைமைக்கு ஏற்றுமதியாளர்கள் தள்ளப்படுகின்றனர். இந்த மாதிரியான பிரச்சனைகளை சமாளிப்பதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலேயே கடைகளை திறப்பது தான் சிறந்தது என்று வர்த்தகர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.