பள்ளிகள் திறப்பது குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் தொடக்க நிலை மற்றும் இடைநிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. வீட்டில் மடிக்கணினி வசதி இல்லாதவர்கள் மற்றும் சுகாதார பணி போன்ற முக்கிய பணிகளில் ஈடுபடுவர்களின் குழந்தைகள் என சில குழந்தைகள் தினமும் பள்ளிக்கு செல்லும் கட்டாயம் உள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் வயதுக்கு ஏற்றவாறு ஒரு நாளைக்கு 3 அல்லது 5 மணி நேரம் பாடங்களை நடத்தலாம் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையில் பிரிட்டனில் வரும் பிப்ரவரி மாதத்தில் சில ஊரடங்கு தளர்வுகள்அறிவிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அனைத்து பள்ளிகளும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னரே கண்டிப்பாக திறக்கப்படும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை என்று பிரிட்டனின் பள்ளி கல்வித்துறை செயலாளர் கவின் வில்லியம்சன் அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவிற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இங்கிலாந்து , அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து என ஒவ்வொரு பகுதிகளிலும் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துக்கள் மாறுபட்டு வருகிறது.
இந்நிலையில் பள்ளிகளை மீண்டும் எப்பொழுது திறக்கலாம் என்பது குறித்து முடிவெடுப்பதில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் “பிரிட்டனில் அனைத்து எல்லைகளையும் அடைத்து ஆசிரியர்களுக்கு முதலில் கொரானாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் நாட்டின் பொருளாதாரத்தை விட குழந்தைகளின் கல்வி தான் முக்கியம்” என்று எதிர் தரப்பினர் கூறி வருகின்றனர்.