டெல்லியில் நடைபெறும் பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் நாளை டெல்லி செல்கிறார்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்னதாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துகளை கேட்பது வழக்கம். அதன் படி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட் தொடர்பாக நாளை மறுநாள் (21-ம் தேதி) மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்க, தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நாளை மாலை டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இதில் கலந்துகொள்வது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி தொடர்பான கோரிக்கை மனுவையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்குகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்களையும் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது. அதே நாளில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தால் , அதிலும் பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.