நூதன முறையில் பெண்ணிடம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் பகுதியில் தனலட்சுமி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது நகையை ஒரு வங்கியில் அடகு வைத்துவிட்டு 1,30,000 ரூபாயை ஒரு பையில் வைத்துக் கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் உங்கள் பணம் 500 ரூபாய் கீழே விழுந்துவிட்டது என்று தனலட்சுமியிடம் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து தனலட்சுமியும் அந்த பணம் தன்னுடையது என்று நினைத்து அதனை எடுக்க முயற்சி செய்தபோது, அந்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்த 1,30,000 ரூபாய் பணத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து அவர் மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நூதன முறையில் பெண்ணிடம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.