Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அவங்க மேல நடவடிக்கை எடுங்க… ரோட்டில் அமர்ந்து தர்ணா…. திருநங்கைகளின் போராட்டம்….!!

தங்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் 80க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. அந்த சமயம் அங்கு பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் சென்று திருமணம் முடிந்த ஒரு மணமக்களுக்கு ஆசி வழங்கி பணம் கேட்டுள்ளனர். ஆனால் மணமக்கள் தரப்பினர் அவர்களுக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். இந்த சம்பவத்தால் மணமக்கள் தரப்பினருக்கும், திருநங்கைகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு விட்டது. இதுகுறித்து சீருடை அணியாத போலீசார் ஒருவர் அங்கு பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் திருநங்கைகளை தாக்கி அங்கிருந்து அனுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த திருநங்கைகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தங்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்க வந்துள்ளனர். இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் எதிரே குண்டு சாலையில் அமர்ந்து திருநங்கைகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த புதுநகர் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட திருநங்கைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அதன்பின் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி உண்டு என்று  திருநங்கைகளை வெளியில் காத்திருக்க கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த திருநங்கைகள் மறுபடியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததையடுத்து திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

Categories

Tech |