தமிழகத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். ஆனால் இன்னும் தேர்தல் குறித்த தேதி வெளியாகவில்லை.
இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நியமித்து உத்தரவிட்டுள்ளார். இந்த அதிகாரிகள் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் தொடர்பாக வரும் புகார்களை கவனித்து தீர்ப்பது, வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்வார்கள் என்று அவர் கூறியுள்ளார்.