குடிநீர் கிணற்றில் பெட்ரோல் ஊறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கேரள-குமரி எல்லை பகுதியான பனச்சமூடு பகுதியை புலியூர் சாலையை சார்ந்தவர் கோபி. இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்று தண்ணீரை தான் கோபியின் குடும்பத்தினர் தங்களது அன்றாடத் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 நாட்களாக கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் பெட்ரோல் வாசம் வீசப்படுவதால் சந்தேகமடைந்த கோபி கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து ஒரு வாளியில் ஊற்றி தீவைத்து சோதித்து பார்த்துள்ளார். தண்ணீர் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது.
இதனை கண்டு கோபி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதை காண்பதற்கு அப்பகுதியில் உள்ள மக்கள் கோபியின் வீட்டிற்கு வந்த வண்ணமாக உள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்திய போது ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் சேமிப்புக் கலன் நிலத்திற்குள் பல அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கலனில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பெட்ரோல் கசிந்து கோபியின் குடிநீர் கிணற்றில் ஊரி இருக்கலாம் என தெரிகிறது.
மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பல குடிநீர் கிணற்றிலும் பெட்ரோல் கலந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தண்ணீரை உபயோகிப்பதனால் மக்கள் பல உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இரு மாநில அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.