மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாலிகண்டபுரத்தை சார்ந்தவர் ஆனந்த். இவரது மாமனாரான ரங்கராஜ் கோவில்பட்டியை சார்ந்தவர். ஆனந்த் கோவில்பட்டிக்கு சென்று ரங்கராஜை அழைத்துக்கொண்டு காரில் வந்துள்ளார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருக்கும் பொழுது நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் உள்ள புளிய மரத்தின் மீது மோதியது. இதில் ரங்கராஜ் பலத்த காயம் அடைந்தார்.
அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த பாடாலூர் காவல் துறையினர் ரங்கராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் விபத்துக்குள்ளான கார் சற்று நேரத்தில் தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனை அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.