கோவில் திருவிழாவையொட்டி குளத்தில் நீராடிய மூன்று இளம்பெண்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள புதூர் கிராமத்தில் லட்சபூபதி என்ற காய்கறி வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி, வினோதினி என்ற இரு மகள்கள் உள்ளனர். அதே பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற ஒரு மகள் உள்ளார். இதில் வினோதினி வடலூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பும், நந்தினி வடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டும், புவனேஸ்வரி குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி இறுதியாண்டும் படித்து வந்துள்ளனர்.
அவர்கள் கிராமத்தில் உள்ள கன்னியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி, அங்குள்ள குளத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெற்று உள்ளது. அப்போது ஏராளமானோர் இந்த விழாவில் கலந்துகொண்டு குளத்தில் நீராடி உள்ளனர். அந்த சமயம் நந்தினி, வினோதினி, புவனேஸ்வரி ஆகிய மூன்று பேரும் குளத்தில் இறங்கி நீராடிய போது, எதிர்பாராதவிதமாக அவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டனர்.