வேலைக்கு செல்லாமல் கணவன் அடித்து துன்புறுத்தியதால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை சேக்கிழார் தெருவில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு மாத பெண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் ஆனந்தராஜ் வேலைக்கு செல்லாத காரணத்தால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆனந்தராஜ் தனது மனைவி தீபாவிடம் மாமனார் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வருமாறு அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த தீபா தனது வீட்டில் உள்ள மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ். மணிமேகலை தலைமையில், காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீபாவின் உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தீபாவின் தற்கொலைக்கு காரணமான அவரது கணவர் ஆனந்தராஜை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஆனந்தராஜ், சிறையில் அடைக்கப்பட்டார்.