தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தை மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்துள்ளனர். இன்னிலையில் காலை 6:50 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்ட உடன் பக்தர்களின் உடல் வெப்பநிலையானது பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டவுடன் மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து கோவிலில் தை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அதன் பின் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி மற்றும் வாசனை திரவங்கள் போன்ற 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் இருந்த சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமியை தரிசித்து விட்டு சென்றனர். மேலும் தை மாத பிரதோஷம் என்பதாலும், குடியரசு தின விடுமுறை நாள் என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வந்து சுவாமியை தரிசித்து விட்டு சென்றனர். அதோடு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு போன்றவற்றை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.