கிணற்றில் உள்ள தண்ணீரில் பெட்ரோல் கலந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கன்னியாகுமரி கேரள எல்லைப்பகுதியான பனச்சமூடு, புளியூர்சாலை என்ற பகுதியில் கோபி என்பவர் வசித்துவருகிறார். இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு இருக்கின்றது. இந்த கிணற்றில் உள்ள தண்ணீரை தான் கோபியின் குடும்பத்தினர் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 6 நாட்களாக கிணற்றில் இருந்து எடுக்கும் தண்ணீரில் பெட்ரோல் வாசம் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கோபி தண்ணீரை வாளியில் எடுத்து தீ வைத்தபோது, தண்ணீரானது கொழுந்துவிட்டு எரிந்தததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து தண்ணீரில் பெட்ரோல் கலந்திருப்பது உறுதியானதை அடுத்து அக்கம்பக்கத்தினர் பலர் அங்கு சென்று பார்த்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தமிழக பகுதியில் கோபியின் வீட்டையொட்டி ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது என்றும், அங்கு பெட்ரோல் சேமிப்பு கலன் பல அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அந்தக் கலனில் இருந்து தான் பெட்ரோல் கசிந்து கோபியின் வீட்டு கிணற்றில் கலந்து இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு உள்ள பல கிணற்றில் இவ்வாறாக குடிநீர்களில் பெட்ரோல் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது. இது மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இரு மாநில அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.