சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த ரூபாய் 35 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விமானநிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் அதிகளவில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் கமிஷனர் உத்தரவின்படி, சென்னை விமான நிலையத்திற்கு துபாய் விமானத்தில் வந்த பயணிகளை கவனமாக கண்காணித்து உள்ளனர். அப்போது அதிகாரிகளுக்கு ராமநாதபுரத்தில் வசித்து வரும் முகமது மற்றும் இப்ராஹிம் ஆகிய இரண்டு பேர் மீது சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
அதன் பின் அவர்களின் உடமைகளை சோதனை செய்த அதிகாரிகள் அதில் இருந்த 4 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள ஒன்பது விலை உயர்ந்த செல்போன்களை கைப்பற்றியுள்ளனர். இதனைதொடர்ந்து இருவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூபாய் 35 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 706 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். மேலும் அந்த 2 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.