தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 6 பேரை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய குற்றத்திற்காக போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் ரோட்டில் உள்ள சுங்க சாவடியை ஆட்டோ மற்றும் காரில் வந்த 8 பேர் கொண்ட மர்ம நபர்கள் கற்களாலும், உருட்டு கட்டையால் அடித்து நொறுக்கி விட்டனர். அவர்கள் தாக்கியதில் சுங்க சாவடியில் உள்ள கட்டணம் வசூலிக்கும் பூத்களின் நான்கு கண்ணாடிகள். அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் மற்றும் சேர் போன்ற அனைத்து பொருட்களும் முற்றிலுமாக உடைந்து விட்டது. இதனால் பயந்து போன சுங்கச்சாவடி ஊழியர்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓடி விட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து ராமலிங்கம் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையில் தமிழக வாழ்வுரிமை கட்சி கொடியுடன் வந்து மர்ம நபர்கள் சுங்கச்சாவடியை தாக்கியது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் சுங்க சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் பதிவான காட்சிகளை வைத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த கந்தன், விமல்ராஜ், பாபு, சரவணன், அஜித் மற்றும் ரமேஷ் போன்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் சுங்கசாவடி ஊழியர்களுக்கும், தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி பாபுவுக்கும் கட்டணம் செலுத்துவதில் ஏற்கனவே தகராறு ஏற்பட்டது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. அதன் காரணமாகவே அவர்கள் அனைவரும் இணைந்து சுங்க சாவடியை தாக்கியதாக கூறி உள்ளனர். அதோடு இந்த வழக்கில் தலைமறைவான சில நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.