குடிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் கட்டிட மேஸ்திரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நார்லபள்ளி பகுதியில் மாதேஸ்வரன் என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவரது மனைவி பணம் கொடுக்க மறுத்து விட்டதால், கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் மனைவி பணம் கொடுக்காததால் மனமுடைந்த மாதேஸ்வரன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீவைத்து தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் உடல் கருகிய நிலையில் இருந்த அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் மாதேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த சாமல்பட்டி போலீசார் தீக்குளித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.