பிரிட்டனின் உள்விவகார செயலாளர் பிரீதி படேல் மக்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரிட்டனில் சில மக்கள் அறிவிக்கப்பட்ட ஊரடங்கை மீறி விடுமுறைகளை கொண்டாடுவதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார்களாம். எனவே பிரிட்டனின் உள்விவகார செயலாளர் பிரீதி படேல் புதிய விதிமுறையை அறிவித்துள்ளார். அதன்படி பிற நாடுகளுக்கு செல்ல விரும்பும் பிரிட்டன் மக்கள் விமான சேவை நிறுவனம் அல்லது அதற்கு தொடர்புடைய நிறுவனத்தினரிடம் தகுந்த காரணங்களை தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு தெரிவிக்க தவறும் பயணிகளுக்கு $ 200 அபராதம் விதிக்கப்படும் அல்லது அவர்களின் வீட்டிற்கே திரும்ப அனுப்பப்படுவார்கள். மேலும் விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற பல பகுதிகளில் காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளார். அதாவது பணி தொடர்பாக அல்லது மருத்துவ உதவி போன்றவற்றிற்காக அல்லாமல் மற்ற காரணங்களுக்காக இங்கிலாந்திலிருந்து பிற நாடுகளுக்கு செல்லும் பயணம் சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த புதிய விதி முறையானது எப்போதிலிருந்து நடைமுறைக்கு வரும் என்பது தெரிவிக்கப்படவில்லை. எனினும் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து போன்ற நாடுகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் வெவ்வேறு விதமாகவும் அபராதங்களும் வேறுபட்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.