பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அய்யாநல்லூர் கிராமத்தில் ருக்கு என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மதன் என்ற ஒரு மகன் உள்ளார். அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மதன் தனது பிறந்த நாளையொட்டி சூளமேனி கிராமத்தில் உள்ள பெரியப்பா கட்டையன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் செங்கரை பகுதியில் உள்ள காட்டு செல்லியம்மன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் மதன் புறப்பட்டுள்ளார்.
அப்போது இவரது மோட்டார் சைக்கிள் கோவில் அருகில் சென்றபோது, அவ்வழியாக வந்த டிராக்டர் மதனின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் அவரது மோட்டார் சைக்கிள் சுக்குநூறாக நொறுங்கி விட்டது. இதில் படுகாயமடைந்த மதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் மதனின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஊத்துக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.