மெரினாவில் வைக்கப்பட்டுள்ள நம்ம சென்னை செல்பி மையம் தமிழை அவமதிக்கும் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக மெரினா கடற்கரை திகழ்கிறது. அங்கு அதிக அளவில் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துவதுமற்றும் அதில் செல்பி எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பாக சென்னையின் அடையாளமாக இளைஞர்களை கவரும் விதமாக ஒரு இடத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் 24 லட்சம் செலவில் மெரினா கடற்கரையில் ராணி மேரி கல்லூரிக்கு எதிரில் நம்ம சென்னை செல்பி மையம் அமைக்கும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடந்து வந்தன.
இந்நிலையில் சென்னையின் பெருமையைப் போற்றும் வகையில் நம்ம சென்னை என்ற செல்பி ஸ்பாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். இந்த செல்ஃபி ஸ்பாட் சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்குவதுடன், மெரினாவுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நினைவாக செல்பி எடுத்து மகிழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மெரினாவில் வைக்கப்பட்டுள்ள நம்ம சென்னை செல்பி மையம் அடையாளச் சின்னமாக தெரியவில்லை. மாறாக நம் தாய்மொழியை அவமதிக்கும் சின்னமாக நம்ம சென்னை வைக்கப்பட்டுள்ளது என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார். உலகத்தின் இணைப்பு மொழி தான் ஆங்கிலமே தவிர தமிழுடன் கலப்பில் பிணையும் மொழி அல்ல என்று கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள இந்த கருத்து சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.