சென்னையில் முத்துக்குமார் நினைவு நாளில் கலந்து கொண்ட திருமாவளவன் மீனவர்களை காப்பாற்றுங்கள் என்று ஆளுங்கட்சியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை அம்பேத்கர் திடலில் ஈழத் தமிழர் விடுதலைக்காக உயிர்நீத்த கரும்புலி முத்துக்குமாரின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அக்கட்சித் தலைவர் திருமாவளவன் முத்துக்குமாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு சிங்களப் படையை கண்டித்தும், ஈழ விடுதலை வலுபெற வலியுறுத்தியும் கரும்புலி முத்துக்குமார் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். மோடி அரசு மக்களுக்கு விதித்துள்ள விரோத சட்டங்களை கண்டிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணித்தோம்.
குடியரசுத் தலைவர் ஆளும் கட்சியின் அறிக்கையை படிக்கிறார்.குடியரசுத் தலைவரின் உரையில் வெற்று ஆரவாரங்களும், நடைமுறைப்படுத்த முடியாத விஷயங்களும் தான் இருக்கிறது. 25 லட்சம் கிராமப்புறங்களை மேம்படுத்துவோம் என்று கடந்த உரையில் கூறிய குடியரசு தலைவர் தற்போது கார்ப்பரேட் முதலாளிகளுக்காக கிராமப்புறங்களை அளிக்கும் வேளாண் சட்டங்களை கொண்டு இருந்துள்ளார்.
அதுமட்டுமின்றி டிராக்டர் பேரணிக்கு அனுமதி கொடுத்து விட்டு ஆர்எஸ்எஸ் சார்ந்தவர்களை ஏவி வன்முறையை தூண்டி இருப்பது அம்பலமாகி உள்ளது. மீனவர்கள் கொல்லப்படுவதற்கு வெளியுறவுக் கொள்கை தான் காரணம். ஈழத்தமிழர்களை தான் பாதுகாக்க முடியவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களையாவது ஆளுங்கட்சியினர் காப்பாற்ற வேண்டும். மேலும் திமுக கூட்டணிகட்சிகள் கொள்கை சார்ந்து, எந்த உரசலும் இல்லாமல் வலிமையாக இருக்கிறது என்று தெரிவித்தார்.