அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்குமார் என்ற மகன் உள்ளார். தினேஷ்குமார் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன்பின் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக பொன்னேரி பிரிவு சாலை நோக்கி தினேஷ்குமார் சென்றுள்ளார்.
அப்போது எருமப்பட்டி புதிய பேருந்து நிலையம் விநாயகர் கோவில் அருகே நாமக்கல்லில் இருந்து துறையூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தினேஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த எருமப்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.