கள்ளக்காதலை கண்டித்த கணவனை மனைவியே கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தனது மகளையும் கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம்,யோத்தியாப்பட்டணம் அருகே உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் 15 மற்றும் 13 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஓட்டுநர் வேல்முருகன் இறந்த நிலையில் சங்கீதா மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வேல்முருகனின் தாய் திடீரென்று 27ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் என் மருமகள் சங்கீதாவிற்கும், தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வரும் தாண்டானூரைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதன் காரணமாக தனது மகனை தூங்கும்போது கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாகவும் அவர் புகார் அளித்தார். மேலும் தனது 13 வயது பேத்தியை அந்த நபருக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் புகார் அளித்தார்.
பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் 4 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட வேல்முருகன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் முடிவுகள் வந்த பின்பே உண்மை என்ன என்பது தெரிய வரும்.